கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெரு 4-வது சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் தனசீலன்(63). அதே தெருவில் வசிப்பவர் பத்மநாபன்(40). சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இந்த தெருவை சிமென்ட் சாலையாக மாற்றுவது தொடர்பாக பத்மநாபனுக்கும், தாமஸ் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையில் நாயுடு தெரு 4-வது சந்தில் மழை நீர் தேங்கியது. இதனால் தாமஸ் சீனிவாசன் மற்றும் அந்த தெருவில் வசிப்பவர்கள் சேர்ந்து, சாலையைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்மநாபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோட்டூர்புரம் போலீஸார் அங்கு சென்று, அவர்களை சமாதானம் செய்தனர். மேலும், இரு தரப்பையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்கு வந்த இரு தரப்பு வழக்கறிஞர்களும், அங்கும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் காட்சிகள் காவல் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்தன. காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த மோதல் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்லம்மாள் ஆகியோர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
இரு புகார்களின் பேரிலும், கோட்டூர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைவைத்து, யார் மீது வழக்கு பதிவு செய்வது என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.