பல்வேறு சாலைகள் வழியாக வரும் பக்தர்கள், மகாமகம் குளத்தின் வடகிழக்கு மூலையில் நுழைந்து, கிழக்குக் கரை படித்துறையில் இறங்கி, மேற்குக் கரையில் வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனால், குளத்தின் கிழக்குக் கரையில் கடும் நெரிசலும், அசாதாரண சூழ்நிலையும் காணப்பட்டது. இந்த நிலைமையை சமாளிக்க தென்கிழக்குப் பகுதியிலும் ஒரு வழியை ஏற்படுத்த வேண்டும் என ‘தி இந்து’வில் பிப்ரவரி 19-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, நேற்று தென்கிழக்குப் பகுதியில் வரும் பாதை திறக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து வரும் பக்தர்கள் எல்பிஎஸ் சாலை, காளியாபிள்ளைத் தெரு, எல்லையா செட்டித் தெரு, ஜெ.பி. கீழவீதி, எம்ஜிஆர் சிலை, வடிவாய்க்கால், அபிமுகேஸ்வரர் கோயில் தேர்முட்டி வழியாக குளத்தின் கிழக்குக் கரையை அடையும் வகையில் திருப்பிவிடப்படுகின்றனர்.
முக்கிய சாலைகளில் உள்ளூர் போலீஸ்
கும்பகோணத்துக்கு வந்துள்ள வெளிமாவட்ட போலீஸார் முக்கிய சாலைகளில் வாகனத்தையும், பொதுமக்களையும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் தாங்கள் செல்லவேண்டிய இடம் குறித்து போலீஸாரிடம் கேட்டால் அவர்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வழியைச் சொல்கின்றனர். இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, முக்கிய சாலைகளில் உள்ளூர் போலீஸாரை பணியமர்த்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.