தமிழகம்

பொள்ளாச்சியில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: விரைவு நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செய்திப்பிரிவு

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக, சட்ட ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மைய பேருந்து நிலையத்தின் அருகில், டி.இ.எல்.சி சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள விடுதிக்குள் அடையாளம் தெரியாத நபர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை அத்துமீறி நுழைந்து ஆறாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் இரு மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து, எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (12.6.2014) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் இரா. வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, சமூக நலத் துறை அமைச்சர் பா. வளர்மதி, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். சுப்ரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் குற்றவாளியை உடனடியாக தேடிக் கண்டுபிடிப்பது குறித்தும், இது போன்ற சம்பவம் வருங்காலங்களில் நிகழாமல் தடுப்பது குறித்தும், மாணவியர் மற்றும் மகளிர் தங்கி உள்ள விடுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் போது, இந்த விடுதியில் மாணவர்கள் மற்றும் மாணவியர் அனைவரும் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டதும்; விடுதிக் காப்பாளர் விடுப்பில் சென்று இருப்பதும்; பொறுப்பில் உள்ள விடுதிக் காப்பாளர் விடுதியில் தங்கியிராமல், தனது இல்லத்தில் தங்கியிருந்ததும் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இந்த குற்ற நிகழ்வுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவியர் மற்றும் பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த வழிகாட்டி நெறிகளை வகுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தேடிக் கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுத் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நான் காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பாதிக்கப்பட்ட மாணவியருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர் அனுமதியுடன் அவர்களை அரசு இல்லத்தில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த பாலியல் பலாத்கார நிகழ்வுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்வதோடு, எனது தலைமையிலான அரசு வகுத்துள்ள பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT