தமிழகம்

ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் முதலிடம்

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்தல் போன்றவற்றில் நடப்பு நிதியாண்டிலும் தமிழகம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2011-12 நிதியாண்டில் இருந்து இதுவரை ரூ.20 ஆயிரத்து 742 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது நாட்டிலேயே அதிக அளவாகும். இத்திட்டத்தின் கீழ் 2014-15 நிதியாண்டிலிருந்து ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புக்கான பண்ணைக் குட்டைகள், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கொட்டகைகள் அமைத்தல் மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இம்முயற்சியை பாராட்டி மத்திய அரசு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, முயற்சிகளை ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை நிலைக்கச் செய்வதற்கான சிறப்பு விருதை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.7 ஆயிரத்து 155 கோடி உட்பட ஊரக வளர்ச்சித் துறைக்காக ரூ.18 ஆயிரத்து 503 கோடி இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT