பேட்டரி கார் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன். 
தமிழகம்

தடுப்பூசி தட்டுப்பாடு; முதல் தவணை கோவாக்சின் செலுத்தப்படுவது இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திப்பிரிவு

'மக்களைத் தேடி மருத்துவம்' இரண்டு வாரக் காலத்துக்குள் 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இன்று (ஆக. 18) சென்னை கிண்டி கரோனா மருத்துவமனை நோயர்கள் பயன்பாட்டுக்கு எஸ்.கே.சி.எல். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஒய்.எம்.ரெட்டி, ரூ.5 லட்சம் மதிப்பில் சி.எஸ்.ஆர். நிதியுதவியில் வாங்கப்பட்ட பேட்டரி கார் ஒன்றை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து இதுவரை 6, 7 மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களைத் தேடி மருத்துவத்தின் செயல்பாட்டை அறிந்து வந்திருக்கிறோம். இன்று காலை 7 மணி வரை தமிழகம் முழுவதும் இருக்கிற 58,341 உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36,775 நீரிழிவு நோயாளிகள், 25,787 ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள், 3,715 நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், 3,725 பிசியோதெரபி நோயாளிகள் ஆகியோருக்கு அவர்கள் வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதோடு சிறுநீரகக் கோளாறால் வீட்டிலேயே முடங்கி இருக்கிற 18 சிறுநீரக நோயாளிகளுக்கு 18 சிறுநீரகப் பைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்திட்டம் தொடங்கி இரண்டு வாரக் காலத்துக்குள் தமிழகம் முழுவதிலிருந்தும் 1,28,361 தொற்றா நோயர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த 1,28,361 பயனாளிகளும் மிகுந்த சிரமத்தோடு மருத்துவமனைக்கு 10, 15 கி.மீ. செல்ல வேண்டுமென்கிற நிலை மாறி, அவர்களது வீடுகளுக்கே தேடிச்சென்று மருந்துகளைக் கொடுக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இத்திட்டத்தால், இன்னும் 3, 4 மாதங்களில் தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கும் மேல் அந்த மருத்துவச் சேவை சென்று பயனடைய இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் கோவாக்சின் தடுப்பூசி இதுவரை 39,08,250 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. அதில் 36,31,545 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை செலுத்திக்கொண்டு, இரண்டாவது தவணை செலுத்துவதற்கு 4 லட்சம் அளவில் தேவைப்படுகிறது என்பதை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். அவை வந்தபிறகு இரண்டாவது தவணை செலுத்தப்படும்.

கோவிஷீல்ட் தடுப்பூசியை பொறுத்த வரை இரண்டாவது தவணைக்கு 82 நாட்கள் கால இடைவெளி இருப்பதால் அது சீராக செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு 28 நாட்கள் இரண்டாவது தவணை செலுத்துவதற்கு கால இடைவெளி இருப்பதால் மத்திய அரசு அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் செலுத்தப்படவில்லை. இப்போது முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது இல்லை.

பகுப்பாய்வு நிறுவனம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பகுப்பாய்வுக்கான இயந்திரம் ரூ.1 கோடி 20 லட்சம் மதிப்பிலும், அதற்கு சப்போர்ட் செய்யக்கூடிய இயந்திரம் ரூ.80 லட்சம் மதிப்பிலும் வாங்கப்படவுள்ளது. ஆக ரூ.3 கோடி செலவில் அந்நிறுவனம் அமைக்கப்படவிருக்கிறது.

இந்தப் பகுப்பாய்வுக் கூடத்தில் பணிபுரிவதற்காக 5 மருத்துவ டெக்னீசியன்கள் பெங்களூரூவில் உள்ள இன்ஸ்டெர்ம் நிறுவனத்திடம் பயிற்சிப் பெறுவதற்கு அனுப்பப்பட்டு பயிற்சியும் பெற்றுமுடித்துள்ளார்கள். 10-15 நாட்களில் டி.எம்.ஸ். வளாகத்திலேயே முதல்வரால் இப்பகுப்பாய்வுக் கூடம் திறந்துவைக்கப்படவிருக்கிறது.

கிண்டி மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய நல்வாழ்வு மையத்தில் எட்டு வடிவ ஓடுதளத்தில் பயிற்சி, யோகப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை மிகச் சிறப்பாக வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு பிந்தைய நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறோம்.

கிண்டி அரசு கரோனா மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் திறந்தும் வைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள கரோனா பிந்தைய நல்வாழ்வு மையங்களில் மருத்துவம் தேவைப்படுவோர் சிகிச்சைப் பெற்று சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

கரோனா தொற்று 1.2 சதவிகிதம் என்கிற அளவிலே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை என்பது கடந்த மூன்று மாதக் காலத்திற்கு ஒன்றரை லட்சம் அளவுக்கு தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தொற்றின் அளவு 1,804 என்று உள்ளது. மிகப்பெரிய பாதிப்பு என்று எங்கேயும் இல்லை. நேற்றைக்கு சென்னையில் 204 என்கிற அளவில் உள்ளது. நேற்றைக்கு முன்தினம் 1,855 என்ற அளவில் தொற்று இருந்தது. அதில் 51 என்ற எண்ணிக்கையில் குறைந்து 1804 உள்ளது. எனவே தொற்று என்பது குறைந்துகொண்டு வருகிறது. ஆனால் பரிசோதனை என்பது குறைக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்ட் என்ற இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து இதுவரை 2,52,43,530 பெறப்பட்டுள்ளது. அதில் 2,51,66,319 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2,27,680. இதுவரை 18,64,018 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2,70,30,337. கையிருப்பு என்பது நேற்றைக்கு வந்த 2,45,000 தடுப்பூசிகளையும் சேர்த்து 8,89,877 கையிருப்பாக இருந்துகொண்டுள்ளது. தடுப்பூசிகளைப் பொறுத்தவரை எந்தவிதமான தாமதமும் இல்லாமல் செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதில் தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2,03,07,691. இரண்டாவது தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 48,58,628. மொத்தமாக இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 2,51,66,319.

கர்ப்பிணித் தாய்மார்களைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக 2,74,011 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பால் ஊட்டும் தாய்மார்கள் 1,95,934 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அநேகமாக இதுதான் அதிகமாக இருக்கும். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,28,385 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆதரவற்றோர் 1,826 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 940 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத் தொகுப்பிற்கு இன்னும் 13 நாட்களில் 27 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வரவேண்டியுள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் போது பணிநிரந்தரம் என்ற கோரிக்கை வைக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த 10 ஆண்டுக் காலமாக எதுவும் செய்யப்படவில்லை. இதுபோல் பணிநிரந்தரம் செய்யப்பட உள்ளவர்கள் 30 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஏற்கெனவே சொன்னதைப்போல் கரோனாவுக்கு பிறகு ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டு, எவ்வளவு பணியாளர்களை நியமிப்பது என்கிற விவரங்கள் பெறப்பட்டு யாரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT