ரிவால்டோ யானை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதை வனத்துறை சரியாகக் கையாளாததால், முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கூண்டோடு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம், மாவனல்லா, சொக்நள்ளி கிராமப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ரிவால்டோ என்ற காட்டு யானை சுற்றித் திரிந்து வந்தது. தும்பிக்கையில் காயம், வலது கண் பார்வைக் குறைபாடு ஆகிய காரணங்களால் வனப் பகுதிக்குள் செல்லாமல் 12 ஆண்டு காலமாகத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியிலேயே இந்த யானை சுற்றித் திரிந்தது.
அந்த யானையைக் கடந்த மே மாதம் வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே கரால் எனப்படும் மரக்கூண்டில் அடைத்து, வனத்துறையில் கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யானையை வனப்பகுதியில் விட வலியுறுத்தினர். இதனையடுத்து யானையை விடுவிப்பது குறித்து முடிவு செய்யக் குழு அமைக்கபட்டது. அந்தக் குழு ரிவால்டோ யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்தது.
அதன் பேரில், யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தபட்டது. மூன்று மாதம் மரக்கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ரிவால்டோ யானை, லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிக்கல்லா வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்ட ரிவால்டோ, 24 மணி நேரத்தில் 40 கி.மீ. தூரம் ஒரே இரவில் பயணத்து 12 ஆண்டு காலமாக, தான் வாழ்ந்து வந்த வாழைத்தோட்டம் அருகில் உள்ள குறும்பர் பள்ளம் பகுதிக்குத் திரும்பியது. யானை வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துக்குள் விரட்டினர்.
இந்நிலையில், தற்போது ரிவால்டோ சேடப்பட்டி வனப்பகுதியில் நடமாடி வருகிறது. அப்பகுதியில் பிற காட்டு யானைகளுடன் பழகத் தொடங்கியுள்ளது. முன்பு பிற காட்டு யானைகளைக் கண்டால் அப்பகுதியில் இருந்து ஓடி விடும் ரிவால்டோ, தற்போது பிற யானைகளுடன் பழகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ரிவால்டோ யானை விவகாரத்தைச் சரியாகக் கையாளாததால், நீதிமன்ற விவகாரம் நீடித்துக்கொண்டே போனதால், முதுமலை வனத்துறையினரை, அரசு கூண்டோடு மாற்றியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, ''ரிவால்டோ யானையின் மறு வாழ்வுக்காக அமைக்கப்பட்ட குழுவில், முதுமலைக்குள் நுழையக் கூடாது என நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட நபர் இடம்பெற்றிருந்தார். ரிவால்டோ வனத்துக்குள் விடப்பட்டபோது அங்கிருந்துள்ளார். அவரை வனத்துறையினர் வெளியேற்றவில்லை. இந்த விவகாரம் அரசிடம் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கள இயக்குநர், துணை இயக்குநர்கள், சரகர்கள் என அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள இயக்குநர் பணியிடம் தரம் குறைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் வனப்பாதுகாவலராகப் பதவி உயர்த்தப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகக் கள இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்தனர்.