கும்பகோணத்தில் நடைபெற்று வரும் மகாமகப் பெருவிழாவில் கடந்த 6 நாட்களில் 18 லட்சம் பக்தர்கள் மகாமகக் குளத்தில் நீராடியுள்ளனர் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் தெரிவித்தார்.
கும்பகோணம் மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி சிவாலயங்களில் கொடியேற் றத்துடன் தொடங்கியது. அன்றுமுதல் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மகாமகம்- 2016 சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி மகாமகக் குளத்தின் அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே நேற்று நடைபெற்றது.
சிறப்பு மலரை ஆட்சியர் என்.சுப்பையன் வெளியிட, அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா பெற்றுக் கொண்டார். இந்த மலரில் பல்வேறு ஆன்மிகக் கருத்துகள், மகாமகத்தின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 256 பக்கங்கள் கொண்ட இந்த மலரின் விலை ரூ.200.
பின்னர் ஆட்சியர் என்.சுப்பையன் செய்தியாளர் களிடம் கூறியது: மகாமகப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்ற பிப்ரவரி 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 18 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெறும் பிப்ரவரி 22-ம் தேதி வரை இன்னும் பல லட்சம் பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். எவ்வளவு பக்தர்கள் வந்தாலும், நிலைமையைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. போதுமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகாமகப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க இதுவரை 18 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்ன தானம் வழங்க யார் வந்தாலும், அவர்கள் உரிய முறையில் விண்ணப்பித்தால், விதிமுறைகளுக்குட்பட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அருகில் அன்ன தானம் வழங்க அனுமதி வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
மகாமகக் கோயில்களில் இன்று…
மங்களாம்பிகை உடனாய ஆதிகும்பேஸ்வரர் கோயில்: தேரோட்டம், காலை 8.
சோமசுந்தரி அம்பிகை உடனாய வியாழசோமேஸ்வரர், ஞானாம்பிகா உடனாய காளஹஸ்தீஸ்வரர், பிரகன்நாயகி உடனாய நாகேஸ்வரர், விசாலாட்சி - காசிவிசுவநாதர் கோயில்கள்: பல்லக்கு, வெண்ணெய்த்தாழி, காலை 8.
காசிவிசுவநாதர்- நவகன்னிகைகள் கோயில்: திருக்கல்யாணம், இரவு 7.
ராஜகோபால சுவாமி கோயில்: சூர்ணாபிஷேகம், மாலை 5, கண்ணாடி பல்லக்கில் திருக்கல்யாண சேவை, இரவு 7.
சக்கரபாணி சுவாமி கோயில்: சூர்ணாபிஷேகம், காலை 8, படிச்சட்டம், இரவு 7.
சாரங்கபாணி கோயில்: சூர்ணாபிஷேகம், தங்க மங்களகிரியில் வீதி புறப்பாடு, மாலை 6.
ராம சுவாமி கோயில்: சூர்ணாபிஷேகம், கோ ரதம், இரவு 7.
இன்று முதல் 7 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகப் பெருவிழாவையொட்டி நகருக்குள் பேருந்துகளின் இயக்கங்களை தடை செய்யும் வகையில் கும்பகோணம் புறநகர் பகுதிகளில் 7 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையங்கள் இன்று (பிப்ரவரி 20) முதல் செயல்படவுள்ளன.
தஞ்சாவூர், திருவையாறு செல்லும் பேருந்துகள் மேலச்சத்திரம் - நாகேஸ்வரன் ஐடிஐ எதிர்புறம் மற்றும் வலையப்பேட்டை பிரிஸ்ட் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள இரு தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும்.
சென்னை செல்லும் பயணிகளுக்காக அசூரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் கொரநாட்டுக் கருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்.
சென்னையிலிருந்து வரும் பயணிகள் உள்ளூரில் அமைக்கப் பட்டுள்ள பேருந்து நிலையத்தில் (மூப்பனார் நகர் அருகே) இறங்க வேண்டும்.
மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து வரும் பயணிகள் செட்டிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்தே மேற்காணும் ஊர்களுக்கு பேருந்துகள் புறப்படும்.
திருவாரூர், மன்னார்குடி ஆகிய ஊர்களிலிருந்து வரும் பயணிகள் பழவத்தான்கட்டளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்தே மேற்காணும் ஊர்களுக்கு பேருந்துகள் புறப்படும்.
இதுகுறித்து ஆட்சியர் என்.சுப்பையன் கூறியது: இந்த பேருந்து நிலையங்கள் நாளை (பிப்ரவரி 20) முதல் செயல்பட உள்ளன. இதனால் நகருக்குள் பேருந்துகள் வராது. நகருக்குள் செல்ல வசதியாக 93 இலவச மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவை நாளை (பிப்ரவரி 20) காலை முதல் செயல்படத் தொடங்கும். தற்காலிகப் பேருந்து நிலையங் களில் பயணிகளுக்கு சிரமங்கள் ஏற்பட்டால், அதனை தீர்க்க நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்றார்.