சென்னை புழல் மத்திய சிறையில் தங்களை சந்திக்க வந்த உறவினர்களுடன் பேசும் கைதிகள். 
தமிழகம்

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு :

செய்திப்பிரிவு

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. 180 கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

தமிழக சிறைக் கைதிகளுக்கு கரோனாபரவியதால், அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திக்க கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

அதற்கு பதிலாக வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன், சிறைகளுக்கு ஆன்ட்ராய்டு கைபேசிகள் வழங்கப்பட்டு, வீடியோ கால், e-Mulakat செயலி மூலம் பேசிக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேரடி சந்திப்பை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் 16-ம்தேதி முதல் மீண்டும் தொடங்க சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் சிறைக் கைதிகளை அவர்களது உறவினர்கள் நேரில் சந்தித்து பேசினர். இதன்படி 180 கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேசினர்.

“ஒரு கைதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நேர்காணல் அனுமதிக்கப்படும். சந்திக்க விரும்பும் உறவினர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ், 72 மணி நேரத்துக்குள் பெற்ற கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். சனி, ஞாயிறுமற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்துமற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை 15 நிமிடங்கள் கைதிகளைசந்திக்கலாம்” என்று சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT