வில்லிவலம் கிராமத்தில் இருளர் இன மக்களின் குடியிருப்புகளுக்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்காத அவலத்தை ‘தி இந்து’ வெளிக்கொண்டு வந்ததையடுத்து அங்கு மின்வசதி ஏற்படுத்தப்ட்டது. இதனால் மக்களும் இரவில் படிக்க முடியாமல் தவித்த மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் வேகவதி ஆற்றின் கரையை ஒட்டி 14 குடிசை வீடுகளில் 60-க்கும் மேற் பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிசை வீடுகளுக்கு, பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப் படவில்லை. இதனால் இவர்களின் குழந்தைகள் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் இப்பகுதி மாணவர்கள ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். மின்சாரமும் இருந்தால் நிச்சயம் மாவட்ட அளவில் சாதிப்பார்கள். எனவே மின் இணைப்பு வழங்குமாறு ஐயம்பேட்டை மின் வாரியம் மற்றும் உத்திரமேரூர் எம்எல்ஏ ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
இதுதொடர்பான செய்தி ‘தி இந்து’வில் கடந்த 7-ம் தேதி படத்துடன் வெளியானது. இதையடுத்து, மின் வாரியத்தின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் அப்துல்ரஹீம் உத்தரவின்பேரில், இருளர் குடியிருப்பு பகுதியில் இரண்டு மின் கம்பங்களை நட்டு, மின் ஒயர்களை அமைத்து ஒருலைன் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது.
இதுகுறித்து, அம்மக்கள் கூறியதா வது: ஊராட்சிக்கு முறையாக வரி செலுத்தியும், எங்களின் குடிசை வீடுகளுக்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இருளர் மக்களின் அவல நிலையை மின் வாரியத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ‘தி இந்து’வின் செய்தியால், ஒரே நாளில் இணைப்பு வழங்கினர். இதனால், ஊராட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.