நீர் வரத்துக் கால்வாயை சீரமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஏரிக்கால்வாய்யை கிராமமக்கள் தாமாக முன்வந்து தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன பொன்னேரி பகுதியில் ‘வாணியன் ஏரி’ அமைந்துள்ளது. பழமையான இந்த ஏரி சுமார் 37 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பினால் பொன்னேரி, சின்ன பொன்னேரி உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில், ஏரிக்கு வரும் நீர்வரத்துக் கால்வாய் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பெருமழை பெய்தாலும் வாணியன் ஏரி நிரம்பாமல் வறண்டே காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வாணியன் ஏரி கால்வாய்யை தூர்வார வேண்டும் என்றும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு அதிகாரிகள் ஏற்காததால் பொறுமையிழந்த அப்பகுதி மக்கள் வீட்டுக்கு ஒருவர் என திரண்டு வாணியன் ஏரி நீர்வரத்துக் கால்வாய்யை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு தூர்வாரி இன்று சீரமைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘கடந்த சில வாரங்களாக ஜோலார்பேட்டை, பொன்னேரி, ஏலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. எவ்வளவு தான் மழை பெய்ததாலும் இங்குள்ள ஒரு சில ஏரிகள் நிரம்பாமல் உள்ளது.
காரணம் மழைநீர் வரும் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில கால்வாய்கள் புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால், மழைநீர் சீராக செல்ல முடியாமல் அருகேயுள்ள விவசாய நிலங்களில் குட்டைப்போல் தேங்குவதால் பயிர் வகைகள் சேதமாகி வருகிறது.
எனவே, வாணியன் ஏரி நீர்வரத்து கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய் பகுதிகளை தூர்வார வேண்டும். வாணியன் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும் என ஜோலார்பேட்டை ஒன்றிய அலுவலகம், பொன்னேரி ஊராட்சி அலுவலகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
இதனால், ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வாணியன் ஏரிக்கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்.
ஏலகிரி மலையில் உள்ள டெலஸ்கோப் பகுதியில் இருந்து வழிந்தோடும் மழைநீரானது வாணியன் ஏரிக்கு வந்து சேரும். இந்த ஏரிக்கால்வாயை தூர்வாரி சீரமைத்தால் வாணியன் ஏரி முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது.
எனவே, ஏலகிரி மலை பகுதியில் உள்ள டெலஸ்கோப் காட்டுப்பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழைநீர் கால்வாயை சீரமைத்து வருகிறோம். இந்த கால்வாய் மலையடிவாரம் வரை செல்கிறது. இதை முழுமையாக சீரமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் ஏலகிரி மலையில் இருந்து வழிந்தோடும் மழைநீரான எங்குமே வீணாமல் நேரடியாக வாணியன் ஏரிக்கு வந்து சேரும். இதன் மூலம் பொன்னேரி ஊராட்சியின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் அதுமட்டுமின்றி பொன்னேரியை சுற்றியுள்ள 13 கிராமங்களில் பாசன வசதியும் பெருகும்’’ என்றனர்.
அரசு அதிகாரிகள் ஏரிக்கால்வாய்யை தூர்வாரி சீரமைக்க முன்வராததால் பொதுமக்கள் தாமாக முன்வந்து சொந்த பணத்தை செலவழித்து ஏரிக்கால்வாயை சீரமைத்து வருவது பலரது பாராட்டை பெற்றுள்ளது.