மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்யாணி மதிவாணணுக்குப் பிறகு நீண்ட நாளாகவே துணைவேந்தரின்றி கன்வீனர் கமிட்டியின் கீழ் பல்கலைகழகம் நிர்வாகம் செயல்பட்டது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பேராசிரியர் வி. செல்லத்துரை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் மற்றும் அவருக்கு எதிரான சில புகார்கள் அடிப்படையில் முழுமையாக மூன்றாண்டுகள்வரை அவர் பதவியில் நீடிக்க முடியவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அவர் பதவியைவிட்டு விலக்கும் சூழல் உருவானது.
இவரைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியரும், மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேரந்தவருமான எம்.கிருஷ்ணன் கடந்த 2019 டிசம்பரில் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே கரோனா ஊரடங்கு தொடங்கியதால் மாணவர்களின்றி, பல்கலைகழகம் நிர்வாகம் தொடர்ந்து செயல்படவில்லை.
குறைந்த ஊழியர்களைக் கொண்டு தொற்று தடுப்பு விதிகளைப் பின்பற்றி ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி, ஆன்லைன் தேர்வுகளும் நடந்தன. இருப்பினும், பல்கலையின் சில செயல்பாடு காரணமாக தரம் உயர்வு பெற்றாலும், அதற்கான வளர்ச்சி நிதியைப் பெறும் முயற்சியில் துணைவேந்தர் ஈடுபட்டார்.
ஆனாலும், அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 4 மாதமே (டிச.,31) இருக்கும் நிலையில், அவர் திருவாரூர் மத்திய பல்கலைகழகம் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தேர்வு செய்யப்பட்டாலும், துணைவேந்தர் இல்லாத நேரத்தில் பல்கலைகழகம் நிர்வாகத்தை கவனிக்க கன்வீனர் கமிட்டி (நிர்வாக குழு ) இன்னும் நியமிக்கப் படவில்லை.
பெரும்பாலும், துணைவேந்தர் பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே நிர்வாகக்குழு நியமிக்கப்படும். துணைவேந்தர் மத்திய பல்கலையில் பொறுப்பேற்ற நிலையில், நிர்வாகக்குழு அமைப்பதில் இழுபறி உள்ளது. 3 பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் தலைவராக உயர் கல்வித்துறை செயலரும், உறுப்பினர்களாக தற்போதைய சிண்டிக்கேட் உறுப்பினர்களில் சீனியர் ஒருவரும், ஆளுநர் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்.
உயர்கல்வி செயலர் கார்த்திகேயன், சீனியர் சிண்டிக்கேட் உறுப்பினர் ஜோசப் பொன்ராஜ் இருக்கும் நிலையில்,ஆளுநர் பிரதிநிதி நியமிப்பதில் சிக்கல் உள்ளது. தற்போதைய சிண்டிக்கேட் உறுப்பினர்கள் இருவர் பதவிக் காலம் 3 வாரத்தில் முடியும் தருவாயில் சிக்கல் உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு மேலாக நிர்வாக வழிகாட்டுதலின்றி பல்கலை செயல்படுவதால் பல்வேறு பணிகள் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைகழகம் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
நிர்வாகம் தரப்பில் சிலர் கூறியது: ”துணைவேந்தர் மத்திய பல்கலை செல்வதற்கு முன்பாகவே நிர்வாகக் குழு நியமித்து இருக்கவேண்டும். அது நடக்கவில்லை என்றாலும், நிர்வாகக்குழுவை நியமிக்க, உயர்கல்வி துறையிடம் சிறப்பு அவசர அனுமதி பெறவேண்டும்.
இதற்கான முயற்சியை பல்கலை நிர்வாகம் எடுத்தது போன்று தெரியவில்லை. நிர்வாகக்குழு தலைவர், உறுப்பினர் ஒருவர் தயார் நிலையில் இருந்தும், ஆளுநர் பிரதிநிதியை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிப்பதால் பல்கலைகழகம் உரிய வழிகாட்டின்றி அலுவல் பணிகள் பாதிக்கின்றன.
மேலும், ஏற்கெனவே தேர்வாணையர், பதிவாளர் போன்ற பணிகளும் பொறுப்பு நிலையில் இருப்பதால் நிதி உள்ளிட்ட சில நடவடிக்கை குறித்த கோப்புகளைக் கையாளுவதில் சிக்கல் நீடிக்கிறது.
தற்போதைய சிண்டிகேட் உறுப்பினர்களில் இருவரில் ஒருவரை ஆளுநர் பிரதிநிதியாக நியமிக்க முடியாததால் சட்டத்துறை அல்லது வேறு ஒரு துறை செயலரை நியமிக்கலாம் என்ற யோசனையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை, ஆளுநர் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்”என்றனர்.