நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த கட்டிடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை ஒண்டிப்புதுார், சவுடம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ராமசாமியின் மனைவி கரியம்மாள் (83). கணவர் உயிரிழந்த நிலையில் இளைய மகன் ஆறுமுகத்தின் வீட்டில் கரியம்மாள் வசித்து வந்தார். கடந்த 2019 மார்ச் 2-ம் தேதி மாலை வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி கிடந்துள்ளார்.
அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையைக் காணவில்லை. இந்தக் கொலை தொடர்பாக சிங்காநல்லுார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், தர்மபுரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (25), அதே பகுதியில் தங்கி, கட்டிட வேலைக்குச் சென்று வந்ததும், மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து நகைக்காக அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.நாகராஜன் இன்று (ஆக.17) தீர்ப்பளித்தார். அதில், பாலகிருஷ்ணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.