வாலாங்குளத்தில் மீன்கள் இறந்த நிலையில் மிதந்ததற்கு அங்குள்ள நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதே காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வாலாங்குளம் உள்ளது. இந்தக் குளத்தின் கரையோரம், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், இந்தக் குளத்தில் கழிவுநீர் கலப்பதும், குளத்தில் ஆகாயத் தாமரை படர்வதும் குறையவில்லை. அவ்வப்போது இயந்திரங்கள் மூலம் குவியல் குவியலாக ஆகாயத் தாமரைகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், சுங்கம் புறவழிச் சாலையில் உள்ள குளத்தின் கரையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் உயிரிழந்த நிலையில் அண்மையில் மிதந்தன.
இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “குளத்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு குறைவான அளவு ஆக்சிஜன் இருப்பதும் மீன்கள் உயிரிழக்கக் காரணம். குளத்தில் தொடர்ச்சியாகக் கழிவுநீர் கலப்பதால் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. மேலும், உயிரிழந்த மீன்களையும் யாரோ அப்பகுதியில் கொட்டிச் சென்றுள்ளனர்"என்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இறந்து கிடந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்றனர்.
கழிவுநீரைச் சுத்திகரிக்க வேண்டும்
இதுதொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகன்டன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "வாலாங்குளத்தில் உள்ள மீன்கள் உண்ணத் தகுதியானவையா என பகுத்தாய்வு செய்ய வேண்டும். கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள ரயில்வே பாலத்தை ஒட்டிய மழைநீர் வடிகாலில் கழிவு நீருடன் மனிதக் கழிவுகளும் அதிகப்படியாக கலந்து வருகின்றன. மேலும் இந்த வாய்க்காலில் வரும் கழிவுகளால் வாலாங்குளத்தின் முகப்பு பகுதியில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.
வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லக்கூடிய இடமாக அது இருக்கிறது. நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் வசிக்குமிடத்தில் அதிகப்படியான கழிவுநீர் கலப்பதைத் தடுத்து சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்தவும், அரசு மருத்துவமனையில் இருந்து வரும் கழிவு நீரானது குளத்தில் கலப்பதற்கு முன்பு நுண்ணுயிரிகள் முற்றிலும் அழிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.