கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்த போது அங்கு வந்த அரிசி கடத்தல் கும்பல் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக ரேஷன் அரிசி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்துக்கு ரயில், லாரி மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் டன் கணக்கில் கடத்தப்படுகிறது. இதை தடுக்க காவல் துறையினர், வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் மீறி அரிசி கடத்தல் கும்பல் தினந்தோறும் அரிசி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், கேதாண்டப்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி ரயில் மூலம் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து நாட்றாம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில், வருவாய் துறையினர் மற்றும் நாட்றாம்பள்ளி போலீஸார் கேதாண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸார் மடக்கி சோதனையிட்ட போது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்துக்கு ரயில் மூலம் கடத்திச்செல்ல ரயில்வே நிலையத்துக்கு கொண்டு வருவது தெரியவந்தது. இதைதொடர்ந்து, அரிசியுடன் சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்ய முயன்றனர்.
அப்போது, அரிசி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜோலார்பேட்டை அடுத்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த வெற்றி (42) என்பவர் அங்கு வந்து அரிசியை பறிமுதல் செய்யக்கூடாது எனக்கூறி போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் அங்கு வந்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரக்கு வாகனத்தை காவலர்கள் பிடியில் இருந்து மீட்க முயன்று, வாய் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் போலீஸாருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, வருவாய் துறையினர் அங்கு விரைந்து வந்து ரேஷன் அரிசியை கைப்பற்றி திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிபக்கிடங்கிற்கு எடுத்துச்சென்றனர். இது தொடர்பாக நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் அளித்த புகாரின் பேரில் அரிசி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் வெற்றி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருவதும், அதை தடுக்க முயலும் வருவாய் துறை மற்றும் காவல் துறையினரை மிரட்டும் அரிசி கடத்தல் கும்பல் மீது மாவட்ட காவல் நிர்வாகம் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.