தமிழகம்

பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு திமுக வலியுறுத்தல்

வீ.தமிழன்பன்

புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையைக் குறைத்து அறிவிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் இன்று (ஆக.17) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

”புதுச்சேரி மாநிலத்தில் எல்லாவற்றுக்கும் வரி குறைவு என்ற காரணத்தால் அனைத்துவிதமான பொருட்களும் எளிதாகக் கிடைக்கும் சூழல் இருந்து வந்தது.

தற்போது தமிழக அரசு பெட்ரோல் விலையில் ரூ.3-ஐக் குறைத்து அறிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளோர் தமிழகப் பகுதிகளுக்குச் சென்று பெட்ரோல் போடக்கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது புதுச்சேரிக்குப் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என்பதை அரசின் கவனத்துக்குத் தெரியப்படுத்துகிறேன்.

எனவே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை இல்லாமல், உடனடியாகத் தமிழகத்தை விட குறைவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் வகையில் புதுச்சேரி முதல்வர் நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தமிழக முதல்வர் கூறியுள்ளதைப் போல, புதுச்சேரி முதல்வரும் வ.உ.சி.யின் தியாகத்தைப் போற்றி மரியாதை செலுத்தும் வகையில் அவரின் 150-வது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு நாஜிம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT