தியாகி சுந்தராம்பாளின் குடும்பத்தினரைச் சந்தித்து மாலை அணிவித்த எல்.முருகன் உள்ளிட்ட கட்சியினர். 
தமிழகம்

திருப்பூரில் 'மக்கள் ஆசி யாத்திரை': மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

இரா.கார்த்திகேயன்

திருப்பூரில் மக்கள் ஆசி யாத்திரை பயணத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அறியச் செய்யும் நோக்கில், ’மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 2-ம் நாளாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஆக. 17) மேற்கொண்டார். இன்று காலை பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது குடும்பத்தாரைச் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதையடுத்து, கல்லூரியில் படிக்கும் மற்றும் படிப்பை முடித்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், பலரும் வேலைவாய்ப்பு கோரி மனு அளித்திருந்தனர்.

தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஹரிணி, பீச் வாலிபால் போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற பள்ளி மாணவர் தரணிஷ், ஜூடோ போட்டியில் தேசிய அளவில் தங்கம் வென்ற மாணவர் மணிவேலன் ஆகியோரை அங்கு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரும் கேரள மாநிலப் பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவினர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT