அனைத்து மாநிலங்களிலும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. ஆனால், தமிழகத்துக்கு குறிப்பிடும்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தை உலக உயர்கல்வி மையமாக உயர்த்தாமல் ஓய மாட்டேன் என அடிக்கடி சபதம் எடுப்பதை முதல்வர் ஜெயலலிதா வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், உயர்கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட மூன்று உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க ஜெயலலிதா அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
உயர்கல்வியை வளர்க்கும் நோக்கத்துடன் அனைத்து மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இம்முடிவால் பல மாநிலங்கள் பெருமளவில் பயனடைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு குறிப்பிடும்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
உதாரணமாக 1999-2004 வாஜ்பாய் ஆட்சியில் சென்னை, புவனேஸ்வர், கொல்கத்தா, அலகாபாத் ஆகிய நகரங்களில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை (Indian Institutes of Science Education and Research- IISERs) அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த ஆட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், 2004 ஆம் ஆண்டில் பதவியேற்ற மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இத்திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து சென்னை, கொல்கத்தா, போபால், மொகாலி ஆகிய 4 நகரங்களில் இந்த நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி 2006 ஆம் ஆண்டு கொல்கத்தா, 2007 ஆம் ஆண்டு மொகாலி, 2008 ஆம் ஆண்டு போபாலில் இந்த கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்ட நிலையில், சென்னைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் புனே, திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களிலும் இந்நிறுவனங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டு, அவை செயல்படத் தொடங்கி விட்டன. எனினும் சென்னையில் இந்நிறுவனத்தை அமைக்கும் திட்டம் நிரந்தரமாக கிடப்பில் போடப்பட்டு விட்டது.
அதேபோல், தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்), கோவையில் உலகத் தர பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மத்திய பல்கலைக்கழகமும், இந்திய மேலாண்மை நிறுவனமும் அமைக்கப்பட்ட நிலையில், உலகத் தர பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் மட்டும் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற பின்னர், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (எய்ம்ஸ்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, பெருந்துறை ஆகிய 5 இடங்களில் ஏதேனும் ஒன்றில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அந்த இடங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன்பின் 10 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. மீதமுள்ள மாநிலங்களில் எய்ம்ஸ் அமைக்கப்படும் இடங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டதுடன், சில மாநிலங்களில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல்லும் நாட்டப்பட்டுவிட்டது. ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ரூ.500 கோடியில் அமைக்கப்பட்டால் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகள் தமிழகத்தில் தீவிரம் அடையும். ஆனால், இந்த கல்வி நிறுவனத்தை அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிரூட்டி செயல்படுத்த முந்தைய திமுக அரசும், இப்போதைய அதிமுக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவையில் உலகத்தர பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டத்தை தங்களின் சாதனையாக கூறிக்கொண்ட திமுக, அதை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. ரூ.3,000 கோடியில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் உலகத்தர கல்வியை தமிழக மாணவர்கள் பெறுவர். ஆனால், இவற்றை செயல்படுத்துவதில் அதிமுக, திமுக அரசுகள் அக்கறை காட்டவில்லை.
அண்டை மாநிலமான ஆந்திரத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், ஆந்திராவுக்கு 15 மத்திய கல்வி நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன. திருப்பதியில் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி), இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனம்(ஐ.ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( IISER), மத்தியப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினத்தில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்), பழங்குடியினர் பல்கலைக்கழகம், ராஜமுந்திரியில் பெட்ரோலிய பல்கலைக்கழகம், அனந்த்பூரில் மத்திய கலால் வரித்துறை பயிற்சி மையம், கர்னூலில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) ஆகியவை அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கிவிட்டன. ஆனால், இவற்றுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட நிறுவனங்களை தொடங்குவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை.
தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் தராததே இதற்கு காரணம் ஆகும். உயர்கல்வி வளர்ச்சியில் திமுக, அதிமுக அரசுகள் காட்டிய அக்கறை இது தான். அதற்காக மத்திய அரசும் இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்த கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.