தமிழகம்

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? - பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

செய்திப்பிரிவு

டீசல் விலை குறைக்கப்படாதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசின் சார்பில் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 13-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அத்துறையின் நிதிநிலை அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்தார்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான பொது விவாதம், கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா இன்று (ஆக.17) பேசும்போது, ''பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ''பெட்ரோல் விலை மீதான மாநில அரசின் வரிக் குறைப்பால் மாநிலத்தில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், சிறிய கார்களைப் பயன்படுத்துவோர் என சுமார் 2 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஆனால், டீசல் பயனாளிகளுக்கு வேறு வழிகளில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மீனவர்களுக்கு மானியம், போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம், பேருந்து ஓட்டுநர்களுக்கு வரிச் சலுகை என வெவ்வேறு வழிகளில் சில சலுகைகளை வழங்கி வருகிறோம். இப்போதுள்ள நிதி நிலையில் பெட்ரோல் விலையை மட்டும் குறைத்துள்ளோம்'' என்று விளக்கம் அளித்தார்.

SCROLL FOR NEXT