ஆண், பெண் தன்பாலின உறவாளர் களை சட்டப்பூர்வமாக அங்கீகரிப் பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிறப்பித்த 15 கேள்விகளுக்கு பதி லளிக்க மத்திய அரசுக்கு மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விவாகரத்து கோரி தொடரப்பட்ட இரு வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபா கரன், அப்போது ஒரு உத்தரவை பிறப்பித்தார். விவாகரத்து கோரி தொடரப்பட்ட 2 வழக்குகளில் ஒன்று கணவரை ஆண் தன்பாலின உறவாளர் என்றும், மற்றொன்றில் மனைவியை பெண் தன்பாலின உறவாளர் என்றும் கூறி நீதி மன்ற படியேறியுள்ளனர். இது போன்ற முரண்பட்ட பாலுறவு பழக்கங்களால் பெரும்பாலான திருமண வாழ்க்கை தோல்வியில் முடிகிறது. இந்த வழக்குகளில் இளம் தம்பதியின் வயது மற்றும் விருப்பத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு விவாகரத்து அளிக் கப்படுகிறது. ஆனால் இந்தப் பிரச் சினையை அப்படியே விட்டுவிட முடியாது.
சராசரி மனிதர்களில் இருந்து மாறுபட்டு, தன்பாலின பாலுறவு கொள்பவர்களை அங்கீகரித்து அவர்களையும் பாதுகாக்க வேண் டியது மத்திய அரசின் கடமை இல்லையா? அயர்லாந்து போன்ற 30-க்கும் மேற்பட்ட நாடுகள் தன் பாலின சேர்க்கையை ஓட்டெடுப்பு நடத்தி அங்கீகரித்துள்ளன. அதேபோல மத்திய அரசும் இதை ஓர் குற்றமற்ற செயலாக ஏன் கருதக்கூடாது என்பன உள்ளிட்ட 15 கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், 6 மாதங்கள் கடந்தும் இந்த வழக்கில் இதுவரை யாரும் பதிலளிக்கவில்லை. இந் நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மத்திய அரசு செயலர், சட்டம் மற்றும் நீதித்துறை, இந்திய சட்ட ஆணைய தலைவர் ஆகியோர் பதிலளிக்க மீண்டும் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார்.
தன்பாலின சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்ய மறுத்து கடந்த 2013-ல் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.