மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமி உடல்நலக் குறைவால்கடந்த 13-ம் தேதி முக்தி அடைந்தார். இவரது மறைவுக்குப் பிறகு ஆதீன மடத்தில் அன்றாடப் பூஜைகளை இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மேற்கொண்டுள்ளார்.
ஆனால், அவர் ஆதீன சிம்மாசன பீடத்தில் அமரவில்லை. இதனால் ஆதீன சம்பிரதாயங்களின்படி இளைய சன்னிதானம் சுந்தரமூர்த்தி தம்பிரான் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக பட்டம் சூட்டப்பட உள்ளார். தற்போது அதற்கான ஏற்பாடுகளை ஆதீன மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை ஆதீன நிர்வாகத்தினர் கூறியதாவது:
இளைய சன்னிதானமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் முறைப்படி 2019-ம் ஆண்டே நியமித்துவிட்டார். தற்போது அவர் ஆதீனமாக சிம்மாசனத்தில் அமர உள்ளதால் அவரது பெயர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் என்று மாற்றப்பட்டுள்ளது.
இவர் ஆதீனமாவதில் எந்த சிக்கலும் இல்லை. மதுரை ஆதீனம் முக்தியடைந்த பிறகு இயல்பாகவே இளைய சன்னிதானம் மதுரை ஆதீனமாக செயல்படத் தொடங்கிவிட்டார். ஆனால் அவர்ஆதீனமாக சிம்மாசனம் சூட்டப்பட்டு அவரது பீடத்தில் ஏறவில்லை.அதற்கு மடத்தின் வழக்கமான சில பூஜைகள், சடங்குகள் உள்ளன. ஆதீனம் அருணகிரிநாதர் மறைந்த 10-வது நாளில் நடக்கும் குரு பூஜைக்குப் பிறகு இளைய சன்னிதானம், மதுரை ஆதீனத்தின் பீடத்தில் முறைப்படி ஏறி ஆதீன மடத்தின் பணிகளை மேற்கொள்வார்.
இதற்காக வரும் 23-ம் தேதி மடத்தில் ஒரு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனத்தின் மடாதிபதிகள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் முன்னிலையில் இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக சிம்மாசனம் சூட்டப்பட்டு பீடத்தில் ஏறுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தற்போதைய இளைய சன்னிதானத்துக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பகவதி லட்சுமணன். அவரது தந்தை பெயர் காந்திமதிநாதன் பிள்ளை. தாயார் பெயர் ஜானகி அம்மாள். பகவதி லட்சுமணன் 1954-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதிதிருநெல்வேலி டவுனில் பிறந்தார். குன்றக்குடி ஆதீனத்தில் 1975-ம்ஆண்டு தம்பிரானாகப் பதவியேற்று, 2 ஆண்டுகள் சமயத் தொண்டும், தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரானாக 5 ஆண்டுகள் சமயத் தொண்டாற்றினார்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் 35 ஆண்டுகள் மூத்த தம்பிரானாக சமய, சைவத் தொண்டாற்றினார். மதுரை ஆதீனத்தில் மறைந்த ஆதீனம் அருணகிரிநாதரால் 2019-ம்ஆண்டு ஜூன் 6-ம் தேதி சமய தீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை செய்யப்பட்டு இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டார்.
அருணகிரிநாதரின் தத்ரூப பளிங்கு சிலை
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 13-ம் தேதிமுக்தியடைந்தார். கரோனா கட்டுப்பாடுகளால் அஞ்சலி செலுத்த வரமுடியாத பக்தர்கள் ஏராளமானோர், தற்போது மதுரை ஆதீன மடத்துக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர். அவர்கள் அஞ்சலி செலுத்த வசதியாக ஆதீன மடத்தில் அருணகிரிநாதரின் பளிங்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பளிங்குக் கற்களைக் கொண்டு 500 கிலோ எடையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டு, அங்கிருந்து கொண்டுவரப்பட்டு மடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலை தம்பிரான் ஒருவரால் கடந்த ஆண்டு ஆதீனம் அருணகிரிநாதர் உயிரோடு இருந்தபோது வழங்கப்பட்டிருந்தது. மடத்தின் உள்ளே மீனாட்சி - சொக்கநாதர் சிலைகளுக்கு அருகே இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதர் அமர்ந்திருந்த நிலையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் அருகில் சென்று பார்த்தால்தான் அது சிலை என்பது தெரியும். மேலும், மதுரைஆதீனம் மிகவும் விரும்பிப் பயன்படுத்திய புல்லட் மற்றும்யமஹா பைக் மடத்துக்குள் அவரது நினைவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.