என்.ஹரிபாலாஜி 
தமிழகம்

மகாராஷ்டிராவில் எஸ்பியாக பணிபுரியும் தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு மீண்டும் மத்திய அரசு விருது: நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்களை வீழ்த்தியவர்

இ.மணிகண்டன்

மகாராஷ்டிராவில் எஸ்பியாக பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு மத்திய அரசு வீரதீரச் செயலுக்கான விருதை அறிவித்துள்ளது

காவல்துறையில் சிறப்பாக வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சகம் ‘வீரதீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்’ எனும் விருதை வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இவ்விருதைப் பெறுவது காவல்துறையில் மிகவும் அரிதான மற்றும்பெருமைக்குரிய சாதனையாகக் கருதப்படும். மகாராஷ்டிராவில் பணியாற்றி வரும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹரி பாலாஜி இருமுறை இவ்விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் டாக்டர் என்.ஹரி பாலாஜி. மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்த பின்பு, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

அதைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த அவர் 2013-ம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

பின்னர், பால்கர் மாவட்டத்தில் 6 மாதங்கள் பயிற்சிப் பணி முடித்து பீட் மாவட்டத்தில் உதவி எஸ்பியாக 2 ஆண்டுகளும், நக்சல் ஊடுருவல் அதிகமுள்ள மாவட்டங்களில் ஒன்றான கட்சிரோலி மாவட்டத்தில் கூடுதல் எஸ்பியாக இரண்டரை ஆண்டுகளும் பணியாற்றினார்.

அப்போது, நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். கடந்த 2 ஆண்டுகளாக அமராவதி மாவட்டத்தில் எஸ்பியாகப் பணியாற்றி வருகிறார்.

எஸ்பி ஹரி பாலாஜி, மே 2017முதல் ஜூலை 2019 வரை கட்சிரோலி மாவட்டத்தில் சி-60 (கமாண்டோ 60) என்ற சிறப்பு நக்சல் எதிர்ப்பு படையை வழி நடத்தியபோது 60 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. அதில், 74 நக்சல்கள் வீழ்த்தப்பட்டனர்.

2018-ம் ஆண்டில் மட்டும் சுமார் 50 நக்சல்கள் வீழ்த்தப்பட்டனர். இதை அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்று ஹரி பாலாஜியை பாராட்டினர்.

2018-ல் நடந்த தாக்குதலில் இரு நக்சல்களை வீழ்த்தியதற்காக 2021 ஜனவரியில் நடந்த குடியரசு தினவிழாவில்எஸ்பி ஹரி பாலாஜி மத்திய உள்துறை அமைச்சகத்தால் முதல் தடவையாக ‘வீரதீரச் செயலுக்கான போலீஸ் பதக்கம்’ பெற்றார். தற்போது 2-வது தடவையாக இப்பதக்கம் நேற்று முன்தினம் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அவருக்கு வழங்கப்பட்டது.

2019-ம் ஆண்டில் நக்சல்களின் தலைமை இடமாகக் கருதப்படும் அபுஜ்மாட் எனும் அடர்ந்த காட்டில் 200 போலீஸார் கொண்ட படையை ஹரி பாலாஜி வழிநடத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு மூத்தமாவோயிஸ்ட் குழுவை வீழ்த்தினார். அந்த சம்பவத்தில் பல முதுநிலை நக்சல்கள் படுகாயம் அடைந்தனர். இதைப் பாராட்டும் வகையில்மத்திய உள்துறை அமைச்சகம் 2-வது முறையாக எஸ்பி ஹரிபாலாஜிக்கு இந்த விருதை வழங்கிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT