தமிழகம்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை

செய்திப்பிரிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப். 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திமுகவிடம் எத்தனை இடங்களைக் கேட்பது என்பது தொடர்பாக, காங்கிரஸுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள இடங்களை அடையாளம் கண்டு, பட்டியல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், வெற்றி வாய்ப்புள்ள பெண்கள் மற்றும் பட்டியலின வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சி நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்களை தேர்வு செய்யாமல், கட்சிக்காக உழைக்கும் இளைஞர்கள், இளம் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக, மாவட்டத் தலைவர் ஒருவர் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT