அரியானாவில் நடைபெற்ற அகில இந்திய காவல் துறை மல்யுத்த குழுப் போட்டிகளில் வென்ற போலீஸாருக்குப் பரிசு வழங்கிய ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி. உடன், டிஐஜி எழிலரசன் உள்ளிட்டோர். படம். ம.பிரபு 
தமிழகம்

அகில இந்திய காவல் துறை மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற போலீஸாருக்கு பாராட்டு: பரிசுத் தொகை வழங்கினார் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி

செய்திப்பிரிவு

இந்திய காவல் துறை சார்பில் நடந்த மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக போலீஸாருக்குப் பாராட்டு தெரிவித்து, தமிழக அரசின் பரிசுத் தொகையை வழங்கினார் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி.

ஹரியாணா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழக காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்று, வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு தொகை அளித்து ஊக்குவித்துள்ளது.

தஞ்சாவூர் உதவி ஆய்வாளர் அனுராதா, பளு தூக்குதலில் தங்கப்பதக்கமும், சென்னை சாத்தங்காடு காவலர் அர்ஜுன், வெண்கலமும் வென்றுள்ளனர். உடலமைப்பு போட்டியில் வீராபுரம் காவலர் சரத்குமார், வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். குத்துச் சண்டை போட்டியில் சென்னை காவலர் வினோத், வெள்ளிப் பதக்கமும், நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை தலைமைக் காவலர் அமுதா, வெண்கலமும் வென்றுள்ளனர்.

தங்கப்பதக்கம் வென்ற அனுராதாவுக்கு ரூ.5 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.3 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2 லட்சமும் தமிழக அரசு வழங்கியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பரிசுத் தொகைக்கான காசோலையை ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி, வெற்றி பெற்ற காவலர்களுக்கு வழங்கி, பாராட்டு தெரிவித்தார். டிஐஜி எழிலரசன் உடனிருந்தார்.

நேபாளத்தில் நடைப்பெற்ற 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் சமோவா தீவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி ஆகியவற்றில் உதவி ஆய்வாளர் அனுராதா, தங்கப் பதக்கம் பெற்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT