தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளைப் போல தமிழகத்திலும் நவீன விவசாயத்தை அறிமுகம் செய்வதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
கிராமம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தி கூறினார். கிராமத்தில் உள்ள விவசாயிகள் தான் நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு, துணி போன்றவற்றை உற்பத்தி செய்து தருகின்றனர். ஆனால், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் முதுகெலும்பை திராவிட கட்சிகள், சாராயத்தை கொடுத்து உடைத்து விட்டார்கள். இங்கு சாராயத்தை ஒழித்தால்தான் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சாராயத்தை கொடுத்து ஏழை பெண்களின் தாலியை அறுப்பவர்கள்தான் தாலிக்கு தங்கம் கொடுக்கின்றனர்.
ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற இலவசங்களை கொடுக்க மாட்டோம். விவசாயிகளுக்கு இலவச விதை, அனைத்து மக்களுக்கும் தரமான கல்வி, அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை ஆகியவற்றை இலவசமாக கொடுப்போம், தாலிக்கு தங்கம் கொடுக்காமல் இருக்கும் தாலியை காப்பாற்றுவோம் என்று எங்கள் முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறுகிறார்.
விவசாயிகள் அனைவரும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாமல் கடனில் உள்ளனர். எனவே, மேலை நாடுகளில் நவீன முறையில் விவசாயம் செய்வது போல் இங்கும் இயந்திரங்கள் மூலம் நவீன விவசாயத்தை அறிமுகம் செய்வோம். தமிழ் நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, பெண்கள் நினைத்தால் தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.