ஆறுமுகம். (கோப்புப்படம்) 
தமிழகம்

வாணியம்பாடியில் ரயிலில் சிக்கி தலைமை ஆசிரியர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). இவர், தெக்குப்பட்டு அரசு நடு நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆறுமுகம் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ரயில் மூலம் கோவைக்கு சென்று மருத்துவப் பரிசோதனையும் செய்து வந்தார்.

இதற்காக, வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் உள்ள தனது சகோதரி வசந்தி வீட்டில் தங்கியபடி, ஆறுமுகம் கோவைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, கோவைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக ரயில் மூலம் செல்ல ஆறுமுகம் வாணியம்பாடி ரயில் நிலை யத்துக்கு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வந்தார்.

2-வது நடைமேடைக்கு செல்ல அங்குள்ள தண்டவாளத்தை ஆறுமுகம் அவசர, அவசரமாக கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த விரைவு ரயில் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தலைமை ஆசிரியர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் முரளிமனோகரன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT