தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குவதாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் 'மக்கள் ஆசி யாத்திரை' எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை காமராஜபுரத்தில் இன்று (ஆக.16) தொடங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"எந்த அவையிலும் உறுப்பினராக இல்லாத, சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். எஸ்.சி., மலைவாழ் மக்கள், ஓபிசி பிரிவினர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளனர். எந்த ஒரு கட்சியும் செய்யாததை பாஜக செய்துள்ளது.
சாதாரணக் குடும்பத்தில் இருந்த வந்த எங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துவைக்க இருந்தனர். எங்களை அறிமுகம் செய்து வைக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் அவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பிரச்சினையைக் கிளப்பி அறிமுகம் செய்துவைக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர்.
திமுகவின் 100 நாட்கள் ஆட்சியில், அவர்கள் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால், பட்ஜெட்டில்கூட அது குறித்து எதுவும் இடம்பெறவில்லை. கல்விக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்றனர். அதுபற்றியும் தகவல் இல்லை.
எவையெல்லாம் சாத்தியம் இல்லாமல் இருக்கிறதோ, அவற்றைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற பிறகு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குகிறது.
கொங்கு நாடு வேண்டும், வேண்டாம் என எந்தக் கருத்தையும் பாஜக தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் மக்களின் நிலைப்பாட்டைப் பொறுத்து இருக்கும்.
அனைத்து சாதியைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராவது புதிதல்ல. ஏற்கெனவே பல கோயில்களில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக உள்ளனர்".
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.