தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது பேரவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் 4 பேர் செயல்படுவர் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசின் சார்பில் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 13-ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அத்துறையின் நிதிநிலை அறிக்கையைத் தனியாகத் தாக்கல் செய்தார்
இந்நிலையில் இன்று (மே.16) பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அதையடுத்து சபாநாயகரும் சட்டப்பேரவைத் தலைவருமான அப்பாவு, தலைவர் இல்லாதபோது சட்டப்பேரவையை நடத்த மாற்றுத் தலைவர்களை அறிவித்தார்.
மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இருவரும் இல்லாத நேரத்தில், பேரவையை மாற்றுத் தலைவர்கள் வழிநடத்துவர்.