மேற்கு வங்கத்தில் முறைகேடாக 2 ஆண்டுகள் பயணிகள் ரயிலை இயக்கிய 17 வயது இளைஞர் உட்பட இருவரை ஈரோடு ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. ஈரோடு ரயில்வே போலீஸார் அந்த ரயிலில் சோதனை நடத்தியபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் அமர்ந்திருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களை ரயில் இன்ஜின் ஓட்டுநர் (லோகோ பைலட்) என்று கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொண்டு வந்த பையில் பச்சை, சிவப்பு நிறங்களில் ரயில்வே துறையில் பயன்படுத்தும் கொடிகள், டார்ச்லைட், பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜ், அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்தன. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மேற்கு வங்க மாநிலம் முஸ்சிராபாத் அருகே உள்ள ஹரிராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரது மகன் எஸ்ராபில் ஷேக் (21) என்பதும், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் என்பதும் தெரியவந்தது.
விசாரணை குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது: வங்கதேசத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பிடிபட்டவர்களின் கிராமம் உள்ளது. இவர்களில் 17 வயது இளைஞருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த ரயில்வே இன்ஜின் ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, ரயில் ஓட்டும்போது அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.
இதன் மூலம் ரயில் ஓட்ட கற்றுக் கொண்ட அந்த இளைஞர், போலி அடையாள அட்டை தயார் செய்து கொண்டு, பணியில் இருக்கும் ஓட்டுநருக்கு மாற்றாக, மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயிலை இரு ஆண்டுகளாக ஓட்டி வந்துள்ளார். இதற்கென பணியில் உள்ள ஓட்டுநர்கள் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மாத சம்பளம் கொடுத்துள்ளனர்.
தற்போது ரயிலை இயக்கும் பணி கிடைக்காததால், தனது நண்பரான எஸ்ராபில் ஷேக்குடன், எர்ணாகுளத்தில் கட்டிட வேலைக்காக சென்றபோது பிடிபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மேற்கு வங்கத்தில் 17 வயது இளைஞர் ரயிலை ஓட்ட அனுமதித்த, லோகோ பைலட் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தைத் சேர்ந்த தீவிரவாதிகள் மூலம் ரயிலைக் கடத்த சதி நடந்ததா என்ற கோணத்திலும் ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர். கைதான இருவரில் 17 வயது இளைஞர், கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், எஸ்ராபில் ஷேக் (21) பெருந்துறை கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.