கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்ட விவகாரத்தில் வேலுமணி உட்பட 50 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். சோதனைக்கு பிறகு எஸ்.பி.வேலுமணி சென்னையிலிருந்து விமானம் மூலமாக நேற்று முன்தினம் கோவை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அதிமுகவினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், விமானநிலைய வளாகத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூடியதாக எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.ஆர்.ஜெயராமன், அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், கந்தசாமி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் உள்ளிட்ட 50 பேர் மீது பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.