தமிழகம்

மார்ச் முதல் வாரம் பாஜக தேர்தல் அறிக்கை: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தகவல்

செய்திப்பிரிவு

மார்ச் முதல் வாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அதன் தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் தடுப்பணைகள் கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், 60 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் உண்ணா விரதம் இருந்துவருகின்றனர். பாஜக சார்பில் என் தலைமையில் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பாஜக தேர்தல் அறிக்கையில் நிச்சயம் சேர்க்கப்படும். குஜராத் மாநில முதல்வராக நரேந்திரமோடி இருந்தபோது 17 நதிகள் அந்த மாநிலத்தில் இணைக்கப்பட்டுள்ளன். தற்போது வரும் நிதிநிலை அறிக்கையில் தேசிய நதிநீர் இணைப்பு அறிவிப்பு வரும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் பணியை பாஜக அரசு மேற்கொள்ளும். விவசாயிகளுக்கு பாதிப்பின்றி கெயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய தலைமையிடம் மாநில பாஜக சார்பில் வலியுறுத்துவோம் என்றார்.

SCROLL FOR NEXT