தமிழகம்

தக்கர் பாபா வித்யாலயாவில் சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்

செய்திப்பிரிவு

சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், அப்பள்ளியின் தூய்மைப் பணியாளர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. அப்பள்ளியின் வளாகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் மணிமேகலை, விழாவில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து, கரோனா பரவல் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களான சைதாப்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் ஷாம் சுந்தர், உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர்கள் பிரபாகரன், ரித்திஷ் ஆகியோரை தக்கர்பாபா வித்யாலயாவின் செயலர் மாருதி, இவ்வித்யாலயா சார்பில் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியின் கவுரவ கண்காணிப்பாளர் சரோஜா உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.

இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மிருனாலினி ரமேஷ், செவிலியர் சண்முக சுந்தரி, மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நரேஷ், முனியம்மா, ராஜேஷ், வாசுதேவன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.

தக்கர் பாபா வித்யாலயா பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி பொறுப்பாளர் பிரேமா அண்ணாமலை, உதவி பயிற்சி அதிகாரி ஜி.பஞ்சமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மகாத்மா காந்தி சிலை மற்றும் சமூக செயல்பாட்டாளரும், காந்தியவாதியுமான நிர்மலா தேஷ்பாண்டே ஆகியோர் சிலைகள் முன்பு பள்ளி மாணவர்கள், இப்பள்ளி சார்பில் நடத்தப்படும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள பெண்கள், அரிஜன் சேவா சங்கத்தினர் பங்கேற்று, 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 டார்ச் விளக்குகளை எரியவிட்டபடி சுதந்திர தினத்தை வரவேற்றனர்.

SCROLL FOR NEXT