தமிழகம்

பாரதியாரின் கனவை நிறைவேற்றும் பிரதமர் மோடி: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம்

செய்திப்பிரிவு

மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா, பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழா, சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்த நாள் விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரித் தலைவர் கருமுத்து தி. கண் ணன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் க.தியாகராசன் வரவேற்றார். கண்காட்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காணொலிக் காட்சி மூலம் பேசியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு பெரியது. வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவா, மருது சகோதரர்கள், வஉசி, தீரன் சின்னமலை, ஒண்டிவீரன் உட்பட பலரின் பங்களிப்புடன் சுதந்திரப் போர் தொடங்கியது.

இதில் முக்கியமானவர் சுப்பிரமணிய பாரதி. அவரது 100-வது ஆண்டை நினைவு கூரும் இந்த நேரத்தில் அவரது கனவை நிறைவேற்றும் வகையில், பிரதமர் மோடி செயல்படுகிறார்.

பிரதமரின் தொகுதியான வாரணாசிக்கும், பாரதியாருக்கும் தொடர்பு உள்ளது. அவரது அத்தை குப்பம்மாளும், அவரது கணவரும் 2 ஆண்டுகள் வாரணாசியில் வசித்தபோது, அவர்களுடன் பாரதியார் தங்கி இந்தி, சமஸ்கிருதம் கற்றுள்ளார்.

இன்றைய இளைஞர்கள் பாரதியாரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. பெண்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டவர். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் பிரதமர் பல தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுகிறார்.

சைனிக் பள்ளிகளில் பெண்களுக்கு இடமின்றி இருந்தது. இந்தியா முழுவதும் பெண்களுக்கு இடம் அளிக்கப்படும் என சுதந்திர தின விழாவில் அறிவித்துள்ளார். விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் அழியாத முத்திரையை பதித்தவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோன்று மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் இணைய வழியில் பேசினார்.

SCROLL FOR NEXT