தர்ணாவில் ஈடுபட்ட வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவி சாந்தி. 
தமிழகம்

ஜோலார்பேட்டை அருகே சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்றுவதில் அதிமுக-திமுக இடையே தகராறு: கூட்டுறவு கடன் சங்க தலைவி தர்ணா

செய்திப்பிரிவு

தேசிய கொடி ஏற்றுவதில் அதிமுக- திமுக இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதைக் கண்டித்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவி தர்ணாவில் ஈடு பட்டார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால் நாங்குப்பம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவியாக பொறுப்பு வகித்து வரும், அதிமுக ஒன்றிய மகளிர் அணிச்செயலாளர் சாந்தி தேசிய கொடியை ஏற்ற நேற்று காலை வந்தார்.

சுதந்திர தினத்தையொட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேசிய கொடியை ஏற்ற கடன் சங்க அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அப்போது, அங்கு வந்த திமுகவை சேர்ந்த சிலர், சாந்தியை தேசியக்கொடி ஏற்றக்கூடாது, தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பதால் திமுக வினர்தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் எனக்கூறி சாந்தியை தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜோலார் பேட்டை திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் உமா என்பவர் அங்கு வந்து தேசியக் கொடி ஏற்றினார். இதனால் விரக்தியடைந்த சாந்தி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு நபர் தேசிய கொடியை ஏற்றியதை கண்டித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட சாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததின் பேரில், தர்ணா போராட்டத்தை கைவிட்ட சாந்தி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT