கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தமிழகம்

விவசாயத்துக்கு தனி பட்ஜெட்: தமிழக அரசுக்கு பொன். ராதாகிருஷ்ணன் பாராட்டு

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் மணி மண்டபத்துக்கு இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.

அவர், மணிமண்டபத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”நான் பாஜகவில் அந்த காலத்தை போலவே தற்போது வேலை செய்து கொண்டுள்னேன். அதற்குரிய மரியாதை இருக்கிறது. எதை எப்படி செய்ய வேண்டும் என்பது கட்சிக்கு தெரியும். என்னை பொறுத்தவரை அரசியலில் எதிர்பார்ப்பு என்பது தேவையில்லாத ஒன்று.

தமிழக முதல்வர் தேசிய கொடியேற்றி வைத்து பேசும்போது, கடந்த 100 நாட்கள் என்னுடைய ஆட்சியை பார்த்துள்ளீர்கள். அடுத்து வரும் 100 நாட்கள் அதனை விட மிகச்சிறப்பாக தீவிரமாக செயல்பட போகிறோம் எனச் சொல்லி உள்ளார். இதில் விமர்சனங்களுக்கு இடமில்லை.

ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழக அரசு 2 குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்கள் தமிழகத்தின் நன்மைக்காக அமையும்போது கண்டிப்பாக மகிழ்ச்சித்தரக்கூடியதாக தான் இருக்க முடியும். வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழகத்தில் தான் முதன்முறை. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தமிழகத்தில் இதை செய்தது பாராட்டுக்குரியது.

பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும் கூட, தமிழக மக்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுத்து போராடும் என்பதை மேகேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெளிபடுத்தி உள்ளார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எந்த தெய்வமும், எந்த சாதியும் பார்த்தது கிடையாது. நாம் தான் அவரவர் விருப்பத்துக்கு தக்கவாறு சாமிக்கே சாதியை வைத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்க வேண்டும். தமிழ் நமது ஜீவன். தமிழ் வளர்ந்தால் தமிழன் வளர்வான். அதே நேரத்தில் தமிழ் மட்டுமே எனக்கு வேண்டுமென்று சொன்னால், தாய்ப்பாலை மட்டும் குடித்து 100 வயது வரைக்கு வாழ்வேன் என்று சொல்வதற்கு அர்த்தம்.

தமிழக முதல்வர் வீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அதனை மணிமண்டபத்துடன் இணைத்து பராமரிக்க வேண்டும். நினைவிடங்களில் அவரது வாழ்க்கை குறிப்புகளை வைக்க வேண்டும். அவரது வரலாறை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்” என்றார் அவர்.

SCROLL FOR NEXT