கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு நகரில் உள்ள கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டன. 
தமிழகம்

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 24 இடங்களில் கடைகள் அடைப்பு: மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பால், மருந்தகம் தவிர பிற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் பால், மருந்தகம், மளிகைக் கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, டிவிஎஸ் தெரு, காந்திஜி சாலை, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் சாலை, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. சாலை, மேட்டூர் சாலை, ஸ்டோனி பாலம், வஊசி பூங்கா, காவிரி சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

இதுபோல் பவானியில் காவிரி சாலை, கூடுதுறை, அம்மாப்பேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரிலும், தாளவாடி பஸ்வேஸ்வரா பேருந்து நிலையம், டிஎன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில், டிஜி புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 11 இடங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT