நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15)கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரியில் வழக்கமாக சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால், விழா நடைபெறும் இடம் கடற்கரை காந்தி சிலை அருகே மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட் டுள்ளது. அங்கு கொடி மேடை, பார்வையாளர்கள் அமரும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் இன்று நடைபெறும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீஸாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். மேடைக்கு திரும்பும் அவர் சுதந்திரதின உரையாற்றுகிறார். இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய போலீஸார் உள்ளிட்டோருக்கு பதக்கம், விருது ஆகியவற்றை வழங்குகிறார். பின்னர் காவல்துறையினர், என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள், அரசு, தனியார் பள்ளி மாண வர்களின் அணிவகுப்பு ஆகியவை நடைபெறவில்லை.
இதனிடையே சுதந்திர தின விழா நடைபெறும் கடற்கரை சாலை, பெரியக்கடை காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தின பாதுகாப்புப் பணிகளில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் புறங்களில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும்இடங்களில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர மாநில எல்லை களில் வாகனச் சோதனை நடத்து வதுடன், தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.