நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் போட்டியிட வியூகம் வகுத்துள்ளார். இதனால் அத்தொகுதி முழுவதும் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தது சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தொண்டர்களுக்கு உத்தரவு
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியை தனக்கு பாதுகாப்பான தொகுதியாக சரத்குமார் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் நாடார் வாக்குகள் கைகொடுக்கும் என சரத்குமார் நம்புவதாக தெரிகிறது.
நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி இப்போது அதிமுக வசம் உள்ளது. ஒருவேளை அதிமுக கூட்டணியிலேயே சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கும்பட்சத்தில் நாகர்கோவில் தொகுதியை கேட்டுப்பெறுவது எனவும், வேறு கூட்டணிக்கு சென்றாலும் இத்தொகுதியை பெறுவது என்ற வகையிலும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் தாண்டி ஒருவேளை தனித்து போட்டியிட் டால் கூட வெற்றிபெறும் வகையில் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியினருக்கு உத்தரவு வந்துள்ளது.
கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அரசன் பொன்ராஜ் கூறும்போது, ‘சரத்குமார் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுவது உறுதி. அதற்கு அச்சாரமாக தொகுதிக்குள் உள்ள அனைத்து வாக்குச்சாவடி முகாம்களுக்கும் முகவர்கள் நியமித்து விட்டோம். இதில் சில பூத் கமிட்டிகளில் 100 உறுப்பினர்கள் கூட உள்ளனர்.
வரும் 20-ம் தேதி சரத்குமார் நாகர்கோவில் வருகிறார். அன்று கட்சி கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வெள்ளாடிச்சிவிளை பகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் சேவை மையம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
21-ம் தேதி நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். இதில் தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து பேச உள்ளார். தொகுதிக்குள் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் சரத்குமார் வெற்றி பெறுவார்’ என்றார் அவர்.