தகுதிச் சுற்றில் தேர்வான பின்னரும்நிராகரிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து போலந்தில் நடைபெறும் செவித்திறன் குன்றியோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் டெல்லி சென்றார். இதையடுத்து அவரது சொந்த ஊரில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டை சேர்ந்த முஜீப்,சலாமத் தம்பதியரின் மகள் சமீஹா பர்வீன் (18), காதுகேட்கும் திறனை இழந்தவர். இருந்த போதும் தடகள விளையாட்டில் அபார திறமை கொண்டிருந்தார். இதை பார்த்து வியந்த ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தனர்.
தேசிய போட்டியில் சாதனை
உள்ளூர் போட்டிகளில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் சாதித்த அவர், செவித்திறன் குன்றியோருக்கான தேசிய தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் தங்கப் பதக்கம் வென்றார். இதுவரை அவர் 11 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் போலந்து நாட்டில் இந்தமாதம் நடைபெறவுள்ள சர்வதேச செவித்திறன் குன்றியோருக்கான தடகளப் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு டெல்லியில் நடந்த தகுதி சுற்று போட்டிகளில் சமீஹா பர்வீன் பங்கேற்றார். இதில் அதிக புள்ளிகள் பெற்றிருந்தும் அவருடன் போலந்து செல்வதற்கு செவித்திறன் குறைபாடுடைய வேறு வீராங்கனை யாரும் இல்லாததால் நிராகரிக்கப்பட்டார். இதனால் சமீஹா பர்வீன் ஏமாற்றமடைந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு
இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சர்வதேச தடகளப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்திய அளவில்பங்கேற்ற 12 பேரில் தான்தேர்வான பின்னரும் பெண் என்பதால் தன்னை போலந்துக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தகுதிச் சுற்றில் பெண்கள் வரிசையில் சமீஹா பர்வீன் முதலிடத்தில் உள்ளதால் அவரை சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இப்போட்டியில் அவரை பங்கேற்க வைத்தால் தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, அவரை போலந்து அழைத்துச் செல்ல வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவு நகலை சமீஹா பர்வீன் டெல்லியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வரும் 16-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
டெல்லி பயணம்
இதையடுத்து சமீஹா பர்வீனின் சொந்த கிராமமான கடையாலுமூட்டில் மக்கள் இனிப்புவழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவை சமர்ப்பிப்பதற்காக சமீஹா பர்வீன் தனது தாயார் சலாமத்துடன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஒருவாரம் டெல்லியில் பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் போலந்து செல்கிறார்.