தமிழகம்

இயற்கை வேளாண்மைக்குத் தனிப் பிரிவு, சான்றிதழ்- ரசாயன உரமிடுவோர் மீது நடவடிக்கை

செய்திப்பிரிவு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கத் தனித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இயற்கை வேளாண்மை என்னும் பெயரில், செயற்கை உரமிட்டு வளர்த்து அதிகமான விலைக்கு விற்படுவதைக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கை உரமிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது .

அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:

''அதிகளவில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டதுடன் சுற்றுச்சூழலும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துள்ளது.

இதனால் இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவையும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு இயற்கை வேளாண்மைக்கெனத் தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும். இதற்கென இயற்கை வேளாண் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு, 2021-22ஆம் ஆண்டில் அமல்படுத்தப்படும். இயற்கை வேளாண் இடுபொருட்கள் இன்றியமையாதவை என்பதால், அவை வேளாண் கிடங்குகளிலேயே கிடைக்க வழிவகை செய்யப்படும்.

தனியார் மூலம் விற்கப்படும் இயற்கை இடுபொருட்கள் தரத்தை உறுதிசெய்ய தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

இயற்கை வேளாண்மை என்னும் பெயரில், செயற்கை உரமிட்டு வளர்த்து அதிகமான விலைக்கு விற்படுவதைக் கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இயற்கை எருவைப் பயன்படுத்தும் உழவர்களின் கைபேசி எண்களைக் கொண்டு, இயற்கை விவசாயிகளின் பட்டியல் வட்டாரம்தோறும் தயாரிக்கப்படும். அவர்களுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ரூ.33 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.''

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT