கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதன் சிறப்பம்சங்கள்:
* தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 சதவீதம் என்பதை 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை. அதன்படி, கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் சாகுபடி செய்யப்படும்.
* இருபோக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கை
* கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவரி நில மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த பட்ஜெட்.
* தரிசுநில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி பாசன பரப்பு அதிகரிக்கப்படும்.
* சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.
* பணப்பயிர் வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம்பிடிக்கும்.
* ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை.
* 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்' செயல்படுத்தப்படும். ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' அறிமுகம். நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. மத்திய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.