மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் பொதுநிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (ஆக. 13) தாக்கல் செய்தார். இந்நிலையில், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது .
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
’’நெல் ஜெயராமனின் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்க, பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும். விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா என்பது ஊரக பழமொழி, தமிழ் இலக்கியங்களில் பள்ளு என்ற இலக்கியத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையை நாடகப் போக்கில் நல்குவர்.
முக்கூடற்பள்ளு என்னும் இலக்கியத்தில் ஏராளமான நெல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். முத்துச் சம்பா, கடகுச் சம்பா, சீரகச்சம்பா ஆகியவை அவற்றுள் சில. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, பேணிக் காக்கும் பொறுப்பு வேளாண் துறைக்கு உள்ளது.
திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு விதை உற்பத்தி நிலையங்களில் 200 ஏக்கருக்கு விதை உற்பத்தி செய்து வழங்கப்படும். இத்திட்டத்துக்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் ரூ.25 லட்சம் ஒதுக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.