வேளாண் பட்ஜெட்டை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) காலை 10 மணி முதல் கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்து பேசியதாவது:
"வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் வேளாண் துறையானதும், வேளாண்மை - உழவர் நலத்துறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை அர்ப்பணிக்கிறேன்.
வேட்டையாடித் திரிந்த மனிதனை விளைநிலத்தில் ஊன்றி நாகரிகப்படுத்தியது வேளாண்மைப் புரட்சி. 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த புரட்சியே மனிதனைப் பண்பட்டவனாக மாற்றியது. தன் உணவைத் தானே உற்பத்தி செய்யும் திறனை அடைந்ததும் மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். நிச்சயமில்லாத வாழ்க்கையில் இருந்து நிம்மதியான வாழ்க்கைக்குக் கொண்டு சேர்த்தது வேளாண்மையே. மனித நாகரிகம் பன்மடங்கு உயர்ந்தாலும் உணவின்றி உயிர் வாழ முடியாது.
விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்னரே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். வேளாண் வணிகர்களின் கோரிக்கைகளை கேட்டபின் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
விளைநிலம் வீட்டு மனை ஆவதால் சாகுபடி பரப்பு குறைகிறது. வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் என்பது தொலைநோக்கு திட்டம். மக்களாட்சிக்கு விரோதமாக, தனித்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைபிடிக்காது. உணவு தன்னிறைவை தமிழகம் ஓரளவு எட்டிவிட்டது".
இவ்வாறு அவர் பேசினார்.