தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு ஆக.13-ம் தேதி நள்ளிரவு அமலுக்கு வருகிறது. தமிழக அரசு கடந்த 3 மாதங்களில் ரூ.40 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது என்று நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் தெரிவித்தார்.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன் நேற்று கூறியதாவது:
கடினமான சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய பாதிப்பு, அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மற்றும் கூடுதல் செலவுகள், புதிய அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்படுத்தும் திட்டங்கள் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட்டில் முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமான திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 15-வது நிதிக்குழுவின் அறிக்கையில், தமிழக நகராட்சிகள், நகரப் பகுதிகளுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு குறைந்தது. இதை சரிசெய்ய, இதர நகராட்சிகளுக்கு ரூ.1,000 கோடி, சென்னை மாநகராட்சிக்கு ரூ.500 கோடி என ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதை 6 மாதங்களுக்கான பட்ஜெட் என்றுதான் கணக்கிட வேண்டும். இது கரோனா காலம், அதிக அளவில் செலவுகளை குறைத்தாலோ, உடனடியாக வருவாயைஅதிகரித்தாலோ பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எந்ததிட்டத்தை எவ்வாறு செய்ய முடியும் என்ற அடிப்படையில் துல்லியமாக ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவுகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. கடந்த 3 மாதங்களில்ரூ.40 ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.92,484கோடி கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் வருவாய், கடந்தஆண்டைவிட உயர்ந்துள்ளது. வருவாய் ரூ.35 ஆயிரம் கோடியாக இருக்கும். சில துறைகளில் செலவு அதிகரித்துள்ளது. சில துறைகளில் குறைந்துள்ளது. வருவாய் ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு இன்று (ஆக.13) நள்ளிரவு முதல்அமலுக்கு வரும். 2.63 கோடி இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் உழைக்கும் வர்க்கம், நடுத்தர மக்கள் என்பதால் அவர்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘‘அரசுக்காக பணியாற்றுகிறோம்’’
நிதித்துறை செயலரிடம் ‘‘கடந்த ஆட்சியிலும் நீங்கள்தான் நிதித்துறை செயலராக இருந்துள்ளீர்கள். தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:
நாங்கள் அரசுக்காக பணியாற்றுகிறோம். அரசு நிரந்தர அமைப்பு. ஆட்சி மாறும். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அரசின் கொள்கை எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையில் செயல்பட வேண்டியது எங்கள் கடமை.
வெள்ளை அறிக்கையில் உள்ளது புதிய தகவல் இல்லை. ஏற்கெனவே உள்ள தகவல்தான். 15 ஆண்டுகளில் ஏற்பட்ட மாறுதல்கள் இதில் உள்ளன. 2001-ல் வெளியிட்ட அறிக்கையில் செலவினங்கள் பெரிய பிரச்சினையாக இருந்தது. தற்போது வருவாய் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதன் அடிப்படையில் இந்த தகவல் தொகுப்புக்கு நாங்களும் பொறுப்பாவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.