விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டுஉள்கட்டமைப்பை பராமரிக்க சிறப்பு நிதியளிக்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும். இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.225.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழகவீரர்கள், வீராங்கனைகள் 12 பேருக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 2 வீராங்கனைகளுக்கு அரசு வேலை அளிக்கப்பட்டது. இதன்மூலம், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பது ஊக்குவிக்கப்படுகிறது.
மகப்பேறு கால விடுப்பு
இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். இந்த தேர்தல் வாக்குறுதி 2021 ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு, குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல், கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு தாமதம் இன்றி முழு சம்பளமும் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தன்னலம் கருதாமல் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை ஆற்றினர். இத்தருணத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டி.ஏ.) உயர்த்துவதில் அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை அரசுஊழியர்கள் நன்கு அறிவார்கள். எனவே, அரசுஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.