தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் படி, வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாகவும் நிதி பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாகவும் இருக்கும் என்றும், இந்த நிதியாண்டில் ரூ.92,484.50 கோடி அளவுக்கு கடன் பெற திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட்டுக்கான நிதியாதாரங்கள் குறித்து அவர் பேசியதாவது:
முந்தைய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.2 லட்சத்து 18, 991.96 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திருத்திய மதிப்பீடுகளில் வருவாய் வரவினங்களை ரூ.2 லட்சத்து 2,495.89 கோடியாக குறைக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், சொந்த வரி வருவாய் மதிப்பீடு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 35,641.78 கோடியாக இருந்தது. இது, திருத்திய பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 26,644.15 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி உள்ளிட்டவை வாயிலாக கிடைக்கும் உதவி மானிய வரவுகள், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.40,553.45 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது திருத்த பட்ஜெட்டில் ரூ.34,564.42 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. கரோனா நிவாரணம் உட்பட சில முக்கிய திட்டங்களுக்கு திருத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் வருவாய் செலவினங்கள் ரூ.2 லட்சத்து 61,188.57 கோடியாக உயர்ந்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை
இடைக்கால பட்ஜெட்டில் ரூ.41,417.30 கோடியாக இருக்கும் என்று தவறாக வருவாய் பற்றாக்குறை கணிக்கப்பட்டுள்ளது. இது திருத்த பட்ஜெட்டில், ரூ.58,692.68 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூலதன செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.43,170.61 கோடி, திருத்திய பட்ஜெட்டில் ரூ.42,180.97 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த திருத்த பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.92,529.43 கோடியாக இருக்கும்.
மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில் கடன் வரவுகள், திரும்ப செலுத்துதல் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2021-22ம் ஆண்டில் மாநில அரசு ரூ.92,484.50 கோடிக்கு நிகரக்கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான நிலுவைக்கடன் மத்திய அரிடம் இருந்து ஜிஎஸ்டி இழப்புக்கு மாறாக பெறப்பட்ட கடனை தவிர்த்து, ரு.5 லட்சத்து 77,987 கோடியாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும்போது தமிழகம் உயர்பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.