தமிழகம்

புதுச்சேரி: நீட் அல்லாத இளநிலை பிரிவுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கியது

அ.முன்னடியான்

நீட் அல்லாத இளநிலை பாடப்பிரிவுகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான ஆலைன் மூலம் விண்ணப்பங்கள் விநியோகம் இன்று முதல் தொடங்கியது.

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் நிகழாண்டு (2021-22) இளநிலை தொழில் படிப்புகள், கலை அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் நேற்று இதற்கான இணைய வழி விண்ணப்பங்கள் விநியோகத்தை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதன்படி இளநிலை தொழில் நுட்ப படிப்புகளான பி.டெக், பி.எஸ்சி அக்ரி, ஹார்டிகல்சர், பி.விஎஸ்சி, பி.எஸ்சி நர்சிங், பி.பி.டி, பி.பார்ம், பி.ஏ.எல்எல்பி, டிப்ளமோ படிப்புகளான டிஜிஎன்எம், டிஏஎன்எம், டிசிஇசி, டி.எம்.எல்.டி, டிடிடி, டிஏபிடி, டிசிஆர்ஏ, கலை அறிவியல் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பி.காம், பிபிஏ, பிசிஏ, நுண்கலை படிப்புகளான பிபிஏ, பிவிஏ ஆகிய படிப்புகளுக்கான சென்டாக் வழி சேர்க்கைக்கு www.centacpuducherry.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் விநியோகம், இன்று (ஆக.13) முதல் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆக.31-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.

மேற்கண்ட படிப்புகளுக்கு, புதுச்சேரி , பிற மாநிலம், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் ஆகியோர் உரிய ஒதுக்கீடு தகுதியின்படி விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் கலை, அறிவியல் கல்லூரியில் 4,260 சேர்க்கை இடங்களும், தொழில் நுட்ப படிப்புகளுக்கு 3907 சேர்க்கை இடங்களும் என்று மொத்தம் 8,167 சேர்க்கை இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT