10 ஆண்டு காலத்துக்குள், தமிழகம் முற்றிலுமாகக் குடிசைகளற்ற மாநிலமாக விளங்க வேண்டுமென்பதில் அரசு உறுதியாக உள்ளது என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சங்கள்:
* சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றத்துக்கும், ஏற்ற கட்டுமானத் தொழில்நுட்பத்துக்கு மாறுவது மிகவும் அவசியமாகும். கட்டுமானச் சவால்களை எதிர்கொள்வதற்காக கட்டிட தகவல் மாதிரியாக்கம், புதுமையான விரைவு கட்டுமானத் தொழில்நுட்பம், தானியங்கு தொழில்நுட்பம், நீடித்து நிலை நிற்கும் கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை செயல்படுத்துவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.
* திட்ட மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளி, திட்ட மேற்பார்வை, கண்காணிப்பு மற்றும் பட்டியலிடும் நடைமுறைகள் இவையனைத்தும் ஓராண்டுக்குள்ளாக முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்
* சென்னை நகரக் கூட்டாண்மைத் திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் தொடங்கப்படும்.
* பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள், சாலைகள், கட்டிடடங்கள் போன்ற பொதுச் சொத்துகளை கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளிலும் நீர்நிலைகளைப் புதுப்பித்தல் போன்றவற்றிலும் நகர்ப்புற ஏழைகளை ஈடுபடுத்துவதன் மூலம் பயன்தரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு முன்னோடி திட்டமாக இந்த அரசு ஒரு நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்படுத்தும். 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு 1961 ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியச் சட்டம், தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு குடிசைப்பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம், தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் உள்ளிட்ட வீட்டுவசதித் துறையின் பழைய சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்.
* பெருந்திட்டங்களின் கீழுள்ள நிலப்பரப்பு 22 சதவீதமாக உயர்த்தப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.
* புதிய பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள், மதுரை, கோயம்புத்தூர் - திருப்பூர் பகுதி, வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் பகுதிகளுக்கு ஏற்படுத்தப்படும்.
* 10 ஆண்டு காலத்துக்குள், தமிழகம் முற்றிலுமாகக் குடிசைகளற்ற மாநிலமாக விளங்க வேண்டுமென்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்காக 3,954.44 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீர்நிலைகள் உட்பட ஆட்சேபணையுள்ள புறம்போக்கு நிலங்களிலிருந்து, குடிசையில் வாழும் மக்களை மனிதாபிமானத்துடன் நியாயமான முறையில் மறுகுடியமர்த்துவதற்காக, அனைத்து பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை வகுக்கப்படும்.
* இரண்டாவது தமிழ்நாடு வீட்டுவசதித் துறை வலுவூட்டும் திட்டம் உலக வங்கியின் நிதியுதவியுடன் விரைவில் மேற்கொள்ளப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், நகர்ப்புர ஏழை மக்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைத்திருக்கக்கூடிய அனைவருக்குமான வீட்டுவசதித் திட்டத்தின் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன.
* முதல்வர், மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்திருந்தார். இந்த நோக்கத்துக்காக,
703 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 750 கோடி ரூபாய் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 623.59 கோடி ரூபாய் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* இந்த அரசு, நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பேருந்து சேவைகளின் இயக்கத் திறனை மேம்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். போக்குவரத்து நிறுவனங்கள் சிக்கனமாகச் செயல்படுவதை உறுதி செய்வதற்கும், விதிமுறை அடிப்படையிலான செயல்திறன் குறியீடுகளின் இலக்கை அடைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இலவச அல்லது மானியம் அளிக்கப்பட்ட பேருந்துப் பயணம் வேண்டுமென அரசு விரும்பும் இனங்களில், நெறிசார் செலவு அளவுருக்களின் அடிப்படையில் வெளிப்படையான மானியம் வழங்கப்படும். இந்தப் புதிய முறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்படும்.