பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

பழநி முருகன் கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி: பட்ஜெட்டின் 15 சிறப்பம்சங்கள்

செய்திப்பிரிவு

பழநி முருகன் கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.

அதன் சிறப்பம்சங்கள்:

* திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்துக்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது.

* இதுவரை 5,963 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
95.96 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.

* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவதற்கு 23.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு முட்டைகள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும்.

* கன்னியாகுமரி மற்றும் பூம்புகாரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் பழம்பெருமை மீட்டெடுக்கப்படும்.

* விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும்.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளைப் பராமரிக்க ஒரு சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும்.

*.ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு முன் தணிக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, அவை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணம் செலுத்தும் வங்கியாக (Payments Bank) மாற்றப்படும்.

* தற்போது 131 சேவைகள் இ-சேவை மையங்கள் வாயிலாகவும், 55 சேவைகள் இணையதளம் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்திற்குள், 29 துறைகள் மூலமாக வழங்கப்படக்கூடிய 600-க்கும் மேற்பட்ட சேவைகளும் மின்னணு முறையில் வழங்கப்படும்.

* துணிநூல் துறையில் கவனம் செலுத்துவதற்காக, ஒரு தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.

* போதிய நிதி வசதி இல்லாத 12,959 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாயில் நிலை நிதி ஏற்படுத்தப்படும்.

* பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்த மருத்துவம் மேம்படுத்தப்படும்.

* பக்தர்களின் அனுபவத்தை அதிகரிப்பதற்கும் 539 திருக்கோயில்களுக்கான பெருந்திட்டங்கள் அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன.

* அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கக்கூடிய 2,200 கி.மீ சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6,700 கி.மீ ஒற்றை மற்றும் இடைநிலை வழிச் சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துவதே இந்த அரசின் நோக்கம். தற்போது புற வழிச் சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புற வழிச் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

SCROLL FOR NEXT