மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என 2021-22 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது மதுரை மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை (2021-22 பட்ஜெட்) நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.
அப்போது அவர், "மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழித்தடத்துக்கான சேவைகள், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும். மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். அதே நேரத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணியை இந்த அரசு விரைவாகத் தொடங்கும்.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
இதனைச் சுட்டிக்காட்டி, மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார்.
மதுரை மக்களின் நீண்ட கனவு ஏன்?
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பெரிய நகரம் மதுரை. இங்கு, உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், மதுரை உயர் நீதமன்றக் கிளை, சர்வதேச விமான நிலையம், மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பு, கோயம்பேடுக்கு அடுத்த மிகப்பெரிய மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஐடி நிறுவனங்கள், காமராஜர் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் அரசு, தனியார் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவை உள்ளன.
விரைவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை, பஸ்போர்ட் உள்ளிட்ட பிரம்மாண்ட திட்டங்களும் வர உள்ளன. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மாநகரப்பகுதிகளில் வசிக்கின்றனர். சுற்றுலா, வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தினமும் நாடு முழுவதும் இருந்து மதுரைக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்படாமல் இருந்தது, இதுவரை தென் மாவட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
1974ம் ஆண்டில் இரண்டாவதாக அறிவிக்கப்பட்ட மாநகராட்சி மதுரை. கோவையைவிட போக்குவரத்து நெரிசல் மதுரையில் அதிகம். மதுரையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது எளிதான காரியம் இல்லை. மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிக்க 10 லட்சம் மக்கள் தொகை போதும். ஆனால், மதுரையில் 20 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இப்படி எல்லா வகையிலும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவிப்பதற்கான சாதக அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. எனவே, மதுரை மக்களின் மெட்ரோ கனவு நியாயமானது என்றே விவரமறிந்தவர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், அதற்கான சாத்திய கூறு அறிக்கை தயார் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது மதுரை மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.