நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசு சார்பில் ஆண்டுதோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், சென்னையில் உள்ள தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் அலங்கரிக்கப்படாமல் கேட்பாரற்று கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுதந்திரத்துக்காக போராடிய தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னையில் சிலைகள் உள்ளன. அவை சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, சென்னை துறைமுகம், அரசு அலுவலக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. இந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டும், சிலை இருக்குமிடம் அழகுபடுத்தப்பட்டு, சிலைகள் அலங்கரிக்கப்படுகின்றன. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அந்த சிலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகம் செய்யாமல் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. அவர்களால் நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை, நாம் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழும் வேளையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகள் சென்னையில் கேட்பாரற்று கிடக்கின்றன.
அந்த நாட்களில் அவர்களுக்கு எந்த மரியாதையும் செய்யப்படுவதில்லை. அரசு, அரசியல் கட்சிகள் என யாரும் இச்சிலைகளைக் கண்டுகொள்வதில்லை.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் அதே நேரத்தில், அந்த அலுவலகத்துக்கு மிக அருகில் உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலை கவனிப்பாரின்றி கிடப்பதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க முடிகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, வ.உ.சி மீது அன்பு கொண்ட, துறைமுகத் தொழிலாளி ஒருவர், தனது சொந்த செலவில் மாலை ஒன்றை வாங்கி அணிவித்து மரியாதை செலுத்தியதை பார்க்க முடிந்தது.
அப்போது அவர் கூறும்போது, “எதற்கெல்லாமோ பணத்தை செலவிடும் அரசு, இதுபோன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிலைகளை அலங்கரிப்பதில்லை. எனக்கு மனம் கேட்காமல் மாலை வாங்கி வந்து அணிவித்தேன். ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் கவனிப்பாரின்றி இந்தச் சிலை இருக்கிறது. இது என்னைப் போன்ற நாட்டுப் பற்று கொண்டவர்களுக்கு வேதனையை தருகிறது. இச்செயலால், சுதந்திர போராட்ட வீரர்களை, அடுத்து வரும் தலைமுறையினர் மறக்க நேரிடும்” என்றார்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது குறித்து அமைச்சர் மற்றும் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.